Skip to main content

இந்துத்துவ கூடாரமாகிறதா கோவை பள்ளிகள்?

 ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சாகாக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் கோவை காவல்துறை 

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு  இந்த நிலத்தை ஆண்ட அரசர்களை சடங்கு பரிகாரங்கள் போன்ற மூடநம்பிக்கைகள் வாயிலாக பார்ப்பனர்கள் கட்டுப்படுத்தினர். அதன் மூலம் தங்களின் சனாதன கருத்துகளை  நம் சமூகத்தின் வேர்வரை பரப்பி தங்களுக்கு கீழ் மற்ற அனைவரும் என்ற சாதி வருணாசிரமத்தை நிறுவினார்கள். இதன் நீட்சியாக, பள்ளி கல்வித்துறை காவல்துறை நீதித்துறைகளில் பாஜக தனக்கானவர்களை நிரப்பி எல்லோரையும் தனக்கு கீழ் கட்டுப்பட்டவர்களாக நடத்த முயற்சிக்கிறது.

வடஇந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்  இந்துமத அடிப்படைவாத கருத்துக்களை சாகா பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களை கொண்டு கிருத்துவ இஸ்லாமிய மத வெறுப்பை வளர்கிறது. சிறுபான்மை மதங்களுக்கு எதிராக வன்முறையையும் மதக்கலவரத்தையும் தூண்டிவிட்டு அவர்களை ஒடுக்க ஆதரவாக இருந்து வருகிறது. அதுபோல, தமிழகத்தில் பாஜக, இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா போன்ற எண்ணற்ற கட்சிகளையும் இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி குண்டர்களை இணைத்துக்கொண்டு ”ராஷ்ட்ர சேவிகா சம்தி” என்கின்ற அமைப்பின் மூலம் சாகா பயிற்சிகளை நடத்துகிறது.

கோவையில் KMCH செவிலியர் கல்வி நிறுவனத்தில்  சாகா வகுப்பு நடைபெற இருந்த நிலையில் தந்தை பெரியார் திராவிட கழகம் (த.பெ.தி.க) தலைவர் தோழர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் பல்வேறு இடதுசாரி முற்போக்கு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடின. இந்த சாகா என்ற மதவெறி ஆயுதப்பயிற்சியை தடைசெய்யக்கோரிய புகார் மனு மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக பயிற்சி வகுப்பு நடைபெறாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. அதேசமயம் கோவை விளாங்குறிச்சி சாலையில் உள்ள ஶ்ரீதர்மசாஸ்தா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சாகா பயிற்சி நடந்து கொண்டிருப்பதாக அறிந்து அதை எதிர்த்து மறுநாள் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக காவல்துறையிடம் தெரிவிக்கப்பட்டது.

சனநாயக முறையில் இந்திய அரசியல் சட்டம் அளித்துள்ள உரிமையின் அடிப்படையில் இப்பயிற்சிகளை எதிர்த்து த.பெ.தி.க தலைவர் தோழர் கு..ராமகிருஷ்ணன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், திராவிடர் தமிழர் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மே17 இயக்கம், மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி போன்ற பல அமைப்புகள் பங்கேற்றனர். பள்ளிக்கூடங்களில் கல்வியை மட்டும் போதிப்பதைவிட்டு மத வெறுப்பை, வன்முறையை வளர்த்தெடுக்கும் பயிற்சிகளை நிறுத்திட வேண்டும். இதுபோன்ற வகுப்புகள் இனிமேல் தமிழ்நாட்டில் நடைபெறாமல் இருக்க தடை விதிக்க வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். ஆனால், காவல்துறை உடனே அங்கிருந்த   போராட்டக்காரர்களை முரட்டுத்தனமாக கையாண்டு கைது செய்திருக்கிறார்கள். வேறு மதத்துகாரர்கள் என்ற ஒரே காரணத்தினால் விரோதிகளாக பார்க்கின்ற ஆர்எஸ்எஸின் இந்துத்துவ மத வெறியர்களுக்கு ஆதரவாக தான் காவல்துறையின் செயல்பாடு உள்ளது. இதன் காரணமாகவே, சாகா பயிற்சி நடக்கும் இடத்திற்கு  இரவு பகல் முழுவதும் காவல்த்துறை பாதுகாப்பு வழங்குகிறது. போராட்டம் நடத்த வந்தவர்களை குண்டுக்கட்டாக  காவல்த்துறை அங்கிருந்து அப்புறப்படுத்திய பின் காலத்தாமதமாக வந்த இரண்டு தோழர்கள் சாகா வகுப்பிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பி உள்ளனர். உடனே அவர்களை காவல்துறை முன்னிலையில் ஆர்எஸ்எஸ் தீவிரவாதிகள் கட்டைகளோடு வந்து தாக்கியுள்ளனர். இதன்மூலம், காவல்துறையே தாக்குவதற்கான அனுமதியை கொடுத்துள்ளதாக தெரிகிறது.

தாக்கிய ஆர்.எஸ்.எஸ் ரவுடிகளை காவல்துறையினர் விட்டுவிட்டு தாக்கப்பட்ட தோழர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். ஏற்கனவே கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தோழர்கள் இதை கேள்விப்பட்டு அங்கிருந்த காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தனியாக கொண்டு செல்லப்பட்டு இரு தோழர்களையும் மண்டபத்தில் விட்டு சென்றுள்ளனர். கட்டையால் தாக்கிய ஆர்.எஸ்.எஸ் ரவுடிகளை கைது செய்யக்கோரி புகார் அளிக்க காவல் நிலையம் சென்றவர்களை சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக காக்க வைத்த பிறகு புகாரை பெற்றுள்ளனர்.

மண்டபத்தில் அடைபட்டிருந்த தோழர்களை இரவு 7 மணிக்கு மேலும் விடாமல்  நீங்கள் இனிமேல் சாகா நடக்கின்ற இடத்திற்கு வந்து போராட்டம் நடத்தமாட்டோம் என்று எழுதிக்கொடுத்தால் விடுகிறோம் என்று காவல்துறை மிரட்டியுள்ளது.

“சாகா வகுப்புகள் நடப்பதால்தானே நாங்கள் எதிர்த்து போராடுகிறோம். நீங்கள்  சாகா வகுப்புகளை இனிமேல் நடத்த தடைவிதித்தால் நாங்கள் போராடவேண்டிய அவசியமே இல்லை.” என்று தெரிவித்துள்ளனர். தங்கள் கட்டாயத்திற்கு  ஒத்துவரவில்லை என்பதை உணர்ந்து புகார் கொடுத்த இரண்டு தோழர்களை காவல்த்துறை விசாரிக்கவேண்டுமென்று அழைத்துள்ளது. இதற்கு, காவல்துறையுடன் அனுப்பமுடியாது தேவையென்றால் நாங்களே அழைத்து வருகிறோம் போராடிய தோழர்கள் கூறியுள்ளனர். இப்படியாக நீண்ட நேரம் கடத்திக்கொண்டிருந்த காவல்துறை  வெகுநேரம் கழித்து  விடுவித்தனர்.

கராத்தே, சிலம்பம், யோகா போன்ற கலைகளை பயிற்றுவிப்பதாகா  மாணவர்களை வரவழைத்து ஆர்.எஸ்.எஸ். சாகா வகுப்பை நடத்துகிறார்கள. இதுகுறித்து, அங்கு வரும் மாணவர்களின் பெற்றோர்களுக்கே தெரியாது. நாங்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக தான் பெற்றோர்களுக்கு தெரிந்து சாகா பயிற்சி வகுப்பிற்கு தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளிக்கல்லூரிகளில் அறிவை சொல்லித்தரவேண்டுமே தவிர இதுபோன்று மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் அமைப்புகளுக்கு இடம் தரக்கூடாது என்று தோழர் கு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ராஷ்ட்ர சேவிகா சமிதி நடத்தும்  சாகா வகுப்பை தடை செய்ய ஆணையரிடம் புகார் கொடுத்தபோது “இது தனியார் பள்ளியில் நடக்கிறது. எங்களால் தடுக்க முடியாது” என்று ஆணையர் பதிலளித்துள்ளார்.

கஞ்சா, அபின் போன்ற போதை பெருட்களை தனியார் நிறுவனம் விற்றால் அதை தடுத்து நிறுத்த காவல்துறைக்கு அதிகாரம் இல்லையா? தனியார் நிறுவனங்களில் கொலை கொள்ளை நடந்தால் காவல்துறை இப்படி தான் பதில் சொல்லுமா?

சமூக சீர்கேடுகளை தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை எடுத்திடம் காவல்துறை சமூகத்தில் மத நல்லிணக்கத்தை சகோதரத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் மாணவர்களின் மனதில் நஞ்சை விதைத்திடும் ஆர்.எஸ்.எஸ் சாகா வகுப்புகளை தடுத்து நிறுத்துவதும் காவல்துறையின் கடமை தானே?

அனால், சாகா வகுப்பு நடத்துபவர்களை கைது செய்து சிறையில் அடைக்காமல் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றீர்கள் என்றால் “காவல்துறை யார் கட்டுப்பாட்டில் உள்ளது?” என்ற கேள்வியே மக்கள் மனதில் வலுக்கிறது!

த.பெ.தி.க தலைவர் தோழர் கு.ராமகிருஷ்ணன்.

70 வயதை கடந்த த.பெ.தி.க தலைவர் தோழர் கு.ராமகிருஷ்ணன் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி செல்லும் தமிழ் நாடு காவல்துறை.

மறுக்கப்படும் தங்கள் உரிமைகளுக்காக போராடும் அமைப்புகளின் சுவரொட்டிகளை  ஒட்ட அனுமதிக்காத காவல்துறை இந்துமத வெறியர்களுக்கு சலாம் போடுகின்றது. சென்னையில் நடந்த சாகா வகுப்பை தடுத்து நிறுத்திய காவல்துறை கோவையில் எதிர்ப்பு தெரிவித்த பிறகும் சாகாக்களை அனுமதிக்கிறது. கொங்கு மண்டல காவல்துறை பிரிவு தமிழக அரசு கட்டுபாட்டில் இல்லாமல் தனித்து இயங்குகிறதா? ஆர்.எஸ்.எஸ் செயல் திட்டமான தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து கொங்கு நாட்டை உருவாக்க துடிப்பதற்கு காவல்துறை துணைபோகிறதா? இல்லை, கோவை கலவரம்போல் மீண்டும் ஒரு மத கலவரத்தை நடத்துவதற்கு காவல்துறை  ஆர்எஸ்எஸ்க்கு உதவி செய்து வருகிறதா?

வட இந்தியாவில் எப்படி மசூதிகளை இடிப்பதற்கும் கிருத்துவ வழிபாட்டு தளங்கள் மீது கல்வீசி தாக்குவதுமாக இளைஞர்களை உருவாக்கி வைத்திருக்கிறார்களோ அதுபோல தமிழ்நாட்டிலும்  மத நல்லிணக்கம், சகோதரத்துவம் அனைத்தையும் ஒழித்து இந்துமத வெறியையும் சிறுபான்மை மத வெறுப்பையும் மாணவர்கள் மனதில் ஊட்டுவதே சாகா பயிற்சி எனப்படும் தீவிரவாத பயிற்சியின் நோக்கம் ஆகும். சாகா நடக்கின்ற இடத்திற்கு ஆய்வு செய்ய சென்ற இணை ஆணையரை  வாசலின் உள்ளே நுழையவிடாமல் இந்துதுவ ரவுடிகள் தடுத்து தாக்கமுயற்சி செய்துள்ளார்கள். காவல்துறை இணை ஆணையருக்கே இதுதான் நிலை. இந்த இந்துத்துவ மதவாதிகளை மேலும் வளரவிட்டால் தமிழ்நாட்டை மற்றொரு உத்திர பிரதேசமாக மாற்றிவிடுவார்கள்.

Comments

Popular posts from this blog

காந்தி கொலையும் காமராசர் கொலை முயற்சியும்

  “கத்தி வைத்துக்கொள்ளுங்கள்! காமராஜரைப் பாதுகாப்பதற்காக, கண்டிப்பாய் கத்தி வைத்துக் கொள்ளுங்கள்!” – காமராசர் மீதான கொலை முயற்சி மேலும் தொடராதிருக்க பெரியார் தனது தொண்டர் படையிடம் இட்ட கட்டளை. “இந்த தேசத்திற்கு காந்தி தேசம் என்று பெயர் வையுங்கள்” – காந்தியார் கொலை நினைவூட்டப்பட்டுக் கொண்டேயிருக்க பெரியார் இந்திய சமூகங்களின் முன் வைத்த வேண்டுகோள். காமராசர் மீதான கொலை முயற்சியும், காந்தியடிகள் உயிர் பறித்த நிகழ்வும் வேறு வேறான காரணங்களில்லை. ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ அடிப்படைவாதக் கும்பலின் வேரான சனாதனத்தை அசைத்துப் பார்த்ததால் மனுதர்மத்தை நிலைநிறுத்தத் துடித்த கும்பல் மேற்கொண்ட வெறியாட்டமே இவைகள். அதற்கு மேற்பூச்சுக் காரணமாக அமைந்தவையே பசுவதைத் தடுப்புச் சட்டப் போராட்டம் வழியே காமராசர் மீது ஏவப்பட்ட கொலை முயற்சியும், இந்தியப் பிரிவினைக்கு காந்தி வித்திட்டார் என்பதற்காக கொன்றதாக கோட்சே கூறிய சாட்சியும்.   காமராசர் மீதான கொலை முயற்சி: அப்பொழுது காமராசர் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராயிருந்தார். அவரின் சோசலிய சமத்துவம் நோக்கிய பேச்சுகள் சனாதனிகளுக்கு ஆத்திரத்தைத் தூண்டிக் ...

காவி பயங்கரவாதம்: அச்சுறுத்தலாகும் ஆர்.எஸ்.எஸ்.

  இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கம் பயங்கரவாத அமைப்பு என்று கூறி 3 முறை தடை செய்யப்பட்டது. முதலில் 1948ல் கோட்சேவால் காந்தி சுட்டு கொல்லப்பட்டபோதும், பின்னர் அவசர நிலை (1975-77) அமலில் இருந்தபோதும், மற்றும் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டப் போதும் தடைசெய்யப்பட்டது. இப்படியான தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பு இன்று இந்தியாவில் பெரிய நகரங்கள் தொடங்கி சிறிய பட்டித்தொட்டிகள் வரை சுமார் 60,000-க்கும் மேற்பட்ட கிளைகளை பரப்பியிருக்கிறது என்றால் அது சாதாரண விடயம் அல்ல. அவர்கள் நினைத்ததை சாதிக்க சமூகத்தின் அடி வரை ஊடுருவி அர்ப்பணிப்போடு பணிச் செய்யும் ஒரு தொண்டர் படையை உருவாக்கி உள்ளனர். அதேபோல் அதிகாரத்தின் எல்லா மட்டத்திலும் இவர்களின் ஆட்கள் நிரம்பி உள்ளனர். அதிலும் உயர் மட்ட அதிகாரத்தில் இருக்கும் இவர்கள் நினைப்பதை நடத்தி தரும் உயர் சாதியினர் தான் ஆர்எஸ்எஸின் மிகப் பெரிய பலம். தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கம் காலூன்ற முடியாதென நம்மில் பலர் பேசினாலும், நடைமுறையில் RSS தமிழ்நாட்டில் கால்பதித்து ஆழமாக வேரூன்றி வெகு நாட்களாகி விட்டது. அவர்கள் தமிழகத்தில் தாலுகா வாரியாக 1,788 கிளைகளுக்கு மேல் பரவ...