சமூக நீதி என்ற சொல் தமிழ்நாட்டில் மட்டும் பயன்பாட்டிலுள்ள சொல் அல்ல இந்தியாவில் மட்டும் பயன்பாட்டிலுள்ள சொல் அல்ல. அது, “Social justice” என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அரசியல் பொருளாதார சொல்லாடலாக இருக்கக்கூடிய இந்த “Social justice” என்கிற சொல்லை அமெரிக்கத் தத்துவவியலாளர் ஜான் ராவல்ஸ் (John Rawls) என்பவரோடு தான் உலகம் தொடர்புபடுத்துகிறது. அவர் 1971 இல் தனது கோட்பாடு ஒன்றை வெளியிட்டார். Rawls Theory என்று அறியப்படுகிற அதன் சாரம் என்பது “Distribution of Goods in a Society”. அதாவது, சமூகத்தில் உள்ள அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுதல் ஆகும். கோட்பாடு ரீதியாக, உண்மையில் இதுதான் சமூக நீதி. ஆனால், தமிழ்நாட்டில் 1920களிலேயே நீதிக்கட்சியும் பெரியாரும் அந்த சமூகநீதியை தங்கள் அரசியல் நடவடிக்கைகளின் மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டிவிட்டனர் என்பது தான் நம் வரலாறாக இருக்கிறது. அவர்கள் சமூக நீதி என்ற சொல்லை அப்போது பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம், ஆனால் விகிதாச்சார வகுப்புவாரி இடப்பங்கீடு உரிமையை நடைமுறைக்கு கொண்டு வந்தவர்கள், அவர்கள். சமூக நீதி என்ற...