Skip to main content

அண்ணாவின் பார்வையில் மே தினம்

 

“பாட்டாளி மக்களின் விடுதலை விழா மே தினம். நாடு அல்ல, அதற்கு எல்லை! பாட்டாளிகள் வாழ்வுக்காக, விடுதலைக்காக, உரிமைக்காக மே தினத்தைக் கொண்டாடுகின்றனர். நாளொன்றுக்கு 8 மணி நேரம் உழைப்பது, 8 மணி நேரம் குடும்பத்துடன் குதூகலமாக வாழ்வது, மற்ற எட்டு மணி நேரம் ஓய்வாக இருப்பது – இந்த திட்டத்தை மே தினம் எடுத்துக் கூறுகிறது” – மே நாள் குறித்து அறிஞர் அண்ணாவின் கருத்துகள் இவை.

ஊதிய விகிதம் குறைவாகவும், உழைப்பு நேரம் மிகுதியாகவும் முதலாளி வர்க்கம் தொழிலாளர் வர்க்கத்தை சக்கைகளாய் பிழிந்தெடுத்த காலகட்டத்தில் தங்களது உள்ளக் குமுறல்களை தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்கள் மூலம் வெளிக்காட்டினர். தங்கள் மீது நிகழ்த்திய உழைப்புச் சுரண்டலை நிறுத்த ஒன்று கூடினர். தொழிற்சங்கங்களைக் கட்டினர். உள்ளூர் தொழிற்சங்கங்கள் கூட்டமைப்புகளாயின. மாநாடுகள் நிகழ்ந்தன. உலக நாடுகளுக்கிடையே போராட்டங்கள் பரவின. தொழிலாளர் சங்கங்களின் திரட்சியால் பல கட்ட போராட்டங்கள் நடந்தன. முதலாளித்துவமும், அரசும் கைக்கோர்த்து அனைத்து போராட்டங்களையும் ஒடுக்கினர். தொழிலாளர் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இறுதியில், அமெரிக்கத் தொழிலாளர் அமைப்பின் கடும் முயற்சியின் விளைவாக, பல நாடுகளின் தொழிற்சங்கங்கள் இணைந்த எழுச்சியின் பயனாக 1889-ம் ஆண்டு பாரீசில் நடந்த சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் மே நாள் பிரகடனப்படுத்தப்பட்டது. “உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்” – என்ற பொதுவுடைமைக் கொள்கையின் ஆசான் கார்ல் மார்க்சின் கனவு  மெய்ப்பட்டது. தொழிலாளர்களுக்கு  8 மணி நேரமே வேலை என்பது  உறுதியானது.

உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை சாத்தியமாக்கிய வர்க்கப் புரட்சியை ஏன் இந்தியாவில் எழுப்ப முடியவில்லை என்பதை வரலாற்றின் ஊடாகவும், பண்பாட்டின் வழியாகவும் ஊடுருவிப் பார்த்தவர்கள் திராவிடக் கொள்கையாளர்கள். மார்க்ஸ்-ஏங்கல்சின் பொதுவுடைமைக் கொள்கை அறிக்கையை மொழிபெயர்த்து குடியரசு இதழில் வெளியிட்ட பெரியாரும், அவரைத் தொடர்ந்த திராவிட இயக்கத் தலைவர்களும் பொதுவுடைமை சித்தாந்தத்தை ஆழ்ந்து உள்வாங்கியவர்கள். இந்திய வர்ணாசிரமம் வர்க்கப் புரட்சியை மேலெழும்ப விடாமல் செரித்து விடுகிறது என்பதை உணர்ந்தவர்கள்.   சனாதனத்தின் கூறுகளை ஏற்றுக் கொண்டிருக்கும் இந்தியத் தொழிலாளர்களிடம் புரட்சி ஏற்படாது என திட்டவட்டமாகக் கூறினர். திராவிடர் கழகம் பாட்டாளிகளிடம் ‘கைலாயத்தை நோக்கும் கண்களில் கார்ல் மார்க்சை பார்க்கச் செய்கிறது’ என்றார் அண்ணா. தொழிலாளர்களை அழுத்தி வைத்திருக்கும் ஆரியத்திடமிருந்து மீட்பதே புரட்சியின் முதல் படி என்று கொள்கைத் திட்டங்களை வகுத்தனர் திராவிடக் கொள்கையாளர்கள். அதன்படி சமூக சீர்திருத்தத்தின் ஊடாக அரசியல், பொருளாதார சீரமைப்புகளில் ஈடுபட்டனர். 


“இயற்கை தரும் செல்வத்தை, வசதியைக் கொண்டு, நாளொன்றுக்கு சராசரியாக 2 மணி நேரம் எல்லோரும் வேலை செய்தால், எல்லோரும் வயிறார உண்டு வாழலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அவ்வளவு இயற்கை செல்வமும் அதனை மக்களுக்கான உபயோகப் பொருள்களாக்கும் பாட்டாளிகளின் சக்தியும் உள்ளன. இருந்தும் இவ்வளவு இன்னலை நாம் அனுபவிக்க வேண்டி இருக்கிறது. மனிதனால் இந்தப் பிரச்சினைக்கு முடிவு காண முடியாத காரணம் என்ன? அறிவு இல்லை என்று கூறிவிட முடியுமா? அது அறிவுப்பஞ்சம் இல்லை. இதற்கு காரணம் மனிதனுக்குள் புகுத்தப்பட்ட அச்சம் அவனுடைய அறிவு ஊற்றைப் பாழ்படுத்துகிறது ” – ஒரு எளிமையான சீரான வாழ்க்கை முறையை தங்களின் பித்தலாட்டத்தினால்  கடினமாக்கி  மக்களை மூடத்தனங்களில் மூழ்கடிக்கச் செய்து திக்கு தெரியாத கலத்தைப் போல ஆக்கி விட்டார்கள் என்று மதவாதிகளைக் குறித்து கூறுகிறார்  அண்ணா.

இதனால் தான் உரிமைக்கான போராட்டங்களில் ஒன்றிணைந்து ஈடுபடுவதை தவிர்த்து, ” தொழிலாளி மனமே கூட, ஜீவாவின் குரலிலே, ஜோஷியின் அறிக்கையிலே, கம்யூனிஸ்டுக் கிளர்ச்சியிலே ஈடுபடுவதை விட, விநாயகர் அகவலிலே, விளக்கு வைக்குப் பார்ப்பதிலே, சனி கோயில் பூசையிலே, சோதிடர் சொன்னதிலே தான் அதிகமாக ஈடுபடும். இந்த மனப்போக்கு தான் சகித்துக் கொள்ளும் தன்மையை, ‘நம்மால் என்ன ஆகும்’ என்ற சலிப்பை வளரச் செய்து விட்டது. திராவிடர் கழகத்தராகிய நாம், மே  தினத்தன்று, இந்த மனப்போக்கை மாற்றும் பணி புரிவதின் மூலம், பாட்டாளிகளின் பிரச்சனையில் மற்றவர்கள் கவனிக்க தவறிய, ஆனால் முக்கியமான பகுதியை வலியுறுத்துகிறோம்.” – “முதலாளித்துவம் தொழிலின் பேரால் சுரண்டுகிறது என்றால் ஆரியம் மதத்தின் பேரால், சாதியின் பேரால், பழமையின் பேரால் சுரண்டுகிறது ” என உழைப்பாளர்கள் உள்ளத்தில் துளிர்க்கச் செய்த மூடத்தனங்களையும், அதன் மூலம் உறிஞ்சப்படும் அவர்களின் உழைப்புகளையும் தனது சமூக, வரலாற்று ஆய்வறிவினால் வெளிச்சம் போட்டுக் காட்டினார் அண்ணா.

“பழமையின் பிடிப்பிலிருந்து விலகும் நோக்கம் இருக்க வேண்டும். இதற்குத்தான் நாம் அறிவுத் துறையிலே புரட்சி ஏற்பட்டாக வேண்டும் என்று கூறுகிறோம். மே தினச் செய்தி பாட்டாளிகளின் விடுதலை செய்தி! அந்த விடுதலை, பொருளாதாரத் துறையினது மட்டுமல்ல- அறிவுத் துறையிலேயும் விடுதலை வேண்டும்” . ” நாட்டிலே அறிவுக் கதிர்களைப் பரப்பிய பின்னர் தான் பொருளாதாரப் புரட்சியை உண்டாக்க முடியும்” – எனப் புரட்சியின் அடிப்படையை தெளிவாக விளக்கினார் பேரறிஞர்.

இந்து பத்திரிக்கையின் ஆரிய மேன்மை பேசும், தொழிலாளர்களை பக்தியின் ஊடாக மடை மாற்றும்  நுட்ப அரசியலை அண்ணா தன் காலத்திலேயே இடித்துரைத்திருக்கிறார். “இந்து பத்திரிக்கையை படிப்பது பாமரர்கள் அல்ல. படித்தவர்கள். பாராளுமன்றத்திலேயே இருக்கும் உறுப்பினர்கள். இந்து பத்திரிக்கையின் அன்றாட நிகழ்ச்சியிலே அவர்கள் எண்ண காண்கிறார்கள்?

வேண்டுமா பட்டியல்? இதோ, திருவல்லிக்கேணியிலே – கீதார்த்த தத்துவம். புரசைவாக்கத்தில் – சீதா கல்யாணம். மயிலையிலே- அனுமான் சேதுபந்தனம். மாம்பலத்தில் – ஒரு இடத்தில் ஜீவன் முக்தி விவேகத்தை பற்றிய விளக்கம். மற்றொரு இடத்திலே – கம்ப ராமாயண உபன்யாசம். அடையாற்றிலே – பயங்கர தெய்வ வழிபாடு.

சென்னை பேசுவது இது மட்டுமல்ல; தெருவுக்குத் தெரு திருப்புகழ், பஜனை, தெருவுக்குத் தெரு உடுக்கை சத்தம், வீதிக்கு ஒரு புள்ளையார் கோயில், இப்படி இருந்தால் இந்த நாட்டில் எப்படி லெனின் பிறப்பான்? எப்படி மாசேதுங் பிறப்பான்? – இந்து போன்ற பத்திரிக்கைகள் எந்த செய்திகளை கொண்டு சேர்க்கிறது என்பதைக் கொண்டு இந்த நாட்டில் தொழிலாளர் வர்க்கப் புரட்சியாளர்கள் எப்படித் தோன்ற முடியும் என்ற கேள்வியை எழுப்பியவர் அண்ணா.


 “30 முதலாளிகள் இருப்பார்கள். அவர்களிடம் 30 ஆயிரம் தொழிலாளர்கள் போராடுவார்கள். அதைப்பற்றி 30 கோடி மக்களுக்கு என்ன வந்தது ? அவர்கள் ஏன் இதில் அக்கறை செலுத்த வேண்டும்?” என்று மற்றுமொரு ஆரிய பத்திரிக்கை எழுதியதாக குறிப்பிடுபவர், “மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பிணைப்பில்லாமல் வேரறுக்கப் பார்க்கிறது இந்தப் பத்திரிக்கை” என்று கூறினார். அண்ணா கூறியபடி, இப்பொழுது வரை முதலாளித்துவம் என்பது தொழிற்சாலைகளின் எல்லை வரை மட்டுமே செயல்படுவது, மற்றபடி மக்களின் வாழ்வு நிலைக்கும், அதற்கும் சம்பந்தமில்லை என்கிற நச்சுப் பரவலை பரப்பிக் கொண்டு தானிருக்கின்றன ஆரிய ஊடகங்கள்.

“உருண்டோடுகிற ரயிலை ஓட்டுபவன் யார்? தொழிலாளி! வானத்திலே ஒய்யாரமாக பறக்கும் விமானத்தை ஓட்டுபவன் யார்? தொழிலாளி! இழையை நூற்று நல்லாடை நெய்பவன் யார்? தொழிலாளி! இரும்பு காய்ச்சி உருக்குபவன், இயந்திரங்களை உருக்குபவன்வன் யார்? தொழிலாளி! மிராசுதாரர்கள் மேனாமினுக்கி வாழ்க்கைக்கான பொருள்களை உருவாக்குகிறவன் தொழிலாளி! விஞ்ஞானத்தின் அற்புதங்களுக்கிடையே உயிரை  ஆபத்துக்குள்ளாக்கி விளையாடுபவனும் தொழிலாளி தான். கடலில் மூழ்கி முத்து எடுப்பவன் தொழிலாளி, உழுது நன்செய் பயிரிடுபவன் தொழிலாளி. அந்தத் தொழிலாளி இனம் மகிழ்ந்து கொண்டாடும் திருநாள் தான் மே தினம்” – எனத் தொழிலாளர்களை வகைப்படுத்தி ” ஒவ்வொரு தொழிலாளியும் ஒவ்வொரு வெடிக்கும் எரிமலை – உலையில் காய்ச்சப் பெற்று உருக்காக மாறிப்போன உலோகம் பலம் குன்றிவிடாது, அதுபோலவே தோல்வியில் ஏற்பட்ட வடுக்கள் ஒவ்வொன்றும் தொழிலாளிக்கு ஒரு புதிய சக்தியை கொடுக்கும். பிறிதொரு சமயம் அவன் போரிடும்போது இன்னும் பலத்தோடு தான் போராடுவான்” – எனத் தொழிலாளர்களின் உறுதியை எடுத்துரைத்து “தொழிலாளர்கள் எவ்வளவுக்கெவ்வளவு மடமைப் பிடியில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முற்படுகிறார்களோ அவ்வளவு விரைவில் அவர்களது லட்சியம் கைகூடும்” – எனத் தொழிலாளர்கள் உள்ளத்திலிருந்த உறுதியை மீட்க அச்சம் தரும் மூடத்தனத்திலிருந்து மீள வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்துகிறார்.

“முதலாளி எப்படி உற்பத்தியாகிறான்? எதனால் ஒருவன் முதலாளி ஆகிறான்? இதற்கு சுருக்கமான பதில், தனிப்பட்ட மனிதன் லாபத்தால் முதலாளி ஆகிறான், இன்னும் கொஞ்சம் விளக்கமாக மார்க்ஸ் கூறுகிற படி பார்த்தால் ‘தொழிலாளிகளின் உழைப்பை திருடிக் கொள்கிறான் ஆகவே அவன் முதலாளி ஆகிறான்’- என்று முதலாளித்துவ – தொழிலாளர் வர்க்கத்தின் உண்மை நிலையை விளக்குகிறார். முதலாளிகளுக்கு வாழ்க்கை நடத்துவதற்கு, குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு போதுமானதைத் தவிர மீதி பணத்தை வரி போட்டு அரசாங்கம் வாங்கிக் கொள்ள வேண்டும். முதலாளிகளிடமிருந்து எல்லா ஆலைகளையும் அரசாங்கம் கைப்பற்றிக் கொள்ள வேண்டும். எல்லா தொழிற்சாலைகளையும் சர்க்கார் எடுத்து நடத்த வேண்டும். முதலாளிகள் ஒரு குறிப்பிட்ட இடம் வரையில் தான் வியாபாரம் செய்யலாம். அதற்கு மேல் செல்லவே அரசாங்கத்தின் அனுமதி பெறவேண்டும் போன்ற வழிகளால்  முதலாளித்துவத்தை ஒழிக்க முடியும் எனப் பட்டியலிடுகிறார்.  

“முதலாளித்துவம் ஒரு மதம் பிடித்த யானை, அந்த யானையைப் பிடித்து, வாழை நாரினால் துதிக்கையைக் கட்டி, அந்தக் கயிறை ஒரு வாழை மரத்தில் கட்டிவிட்டு,   ‘பார், பார் நான் முதலாளித்துவத்தை கட்டிப் போட்டு விட்டேன் என்று கூறினால் சரியா? – என்று அரசிற்கும், முதலாளித்துவத்திற்கும் இடையில் உள்ள மறைமுக உறவுகளை நகைச்சுவையாக வெளிப்படுத்துகிறார்.

சோவியத் ரசியாவில் ஜார் மன்னராட்சியின் படைபலத்தை விட உரிமைப் போர் தொடுக்க உள்ள  உரத்தோடு நிற்பவர்களின் வல்லமையை போற்றிப் புகழ்கிறார்.

“அகில உலகிலேயும் இன்று புரட்சி பொங்கிக் கொண்டிருக்கிறது. இதைக் தடுக்க எவராலும் முடியவே முடியாது.  பர்மாவில் பீரங்கி வேட்டுகள் முழங்கிய வண்ணம் இருக்கின்றன; மலேசியாவில் மக்கள் உள்ளத்திலே மாபெரும் புரட்சி: ஈரானில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு ஆட்டம் கொடுத்துள்ள காட்சி; ஆப்கானிஸ்தானத்தின் எல்லையிலே ரஷ்ய நடமாட்டம்; நேபாளத்தில் மன்னராட்சிக்குப் பதில் மக்களாட்சி வேண்டும் என்ற மாறுதல் ; மற்றும் நியூயார்க் கடற்கரையிலே, தேம்ஸ் நதி தீரத்திலே, பாரிஸ் பூங்காவிலே, பெர்லின் கோட்டை வெளியிலே, ஆற்றங்கரையோரத்தில் இந்தோனேசிய சதுக்கத்திலே, பர்மா களத்திலே தொழிலாளர்கள் ஒன்று கூடி  இதய ஒலியை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். சீனாவின் பெரும்பகுதி சிவப்பேறி விட்டது; தென்கிழக்குப் பகுதி நாடுகளில் தொழில் உலகம் விழித்துக் கொண்டு போராட்ட நடவடிக்கைகளில் இறங்கி விட்டன; கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சிவப்புக் கறை படிந்து விட்டது; உழைப்பவருக்கே உரிமையெல்லாம் என்ற முழக்கம் காற்றில் மிதந்து செல்லும் பேரொலியாக இருக்கும். எனவே தொழிலாளர்கள் தங்கள் சில வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டால் இந்திய முதலாளித்துவம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் என்பது திண்ணம் ” என்று உலக புரட்சிகளை பட்டியலிட்டு தொழிலாளர்கள் ஒன்று கூடுவதின் அவசியத்தை விளக்குகிறார் அண்ணா. உலக அரங்கில் நடைபெற்ற தொழிலாளர் புரட்சிகளை அழகிய சொற்றொடர்களால் வர்ணித்த அண்ணா, இன உரிமைக்கான இதய ஒலியாய் தமிழீழத்தில் எழுந்த தமிழர்களின் விடுதலைப் புரட்சியைக் காணும் நிலை வாய்த்திருந்தால் அழகிய தமிழால் செதுக்கியிருப்பார்.  

“உலகம் உழைப்பாளிகளுக்கே, உலுத்தர்களுக்கு அல்ல; பிறர் உழைப்பை உண்டு கொழுப்போருக்கு அல்ல; சுரண்டி வாழ்வோருக்கு அல்ல முதலாளித்துவத்துக்கு அல்ல; ஆரியருக்கு அல்ல; அண்டிப் பிழைக்க வந்து நம்மை மண்டியிடச் செய்த மதத் தரகர் ஆட்டத்துக்கு அல்ல; வடநாட்டு முதலாளித்துவத்துக்கு அல்ல; ” – உழைப்பாளிகளுக்கே உலகம் என்பதை வலுவாக தனது கருத்தியல்களால் நிலைநாட்டியவர் பேரறிஞர் அண்ணா.

முதலாளித்துவத்துவமும், ஆரியமும் சுரண்டும் தொழிலாளர்களின் பெரும்பாடுகளை தெளிவாக  விளக்கிய அண்ணாவின் வழிவந்த திமுக, இப்போது நிலவிவரும் ஒப்பந்த ஊழியர் முறையான தொழிலாளர் விரோத முறையை ஒழித்து நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும். தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், பகுதிநேர-சிறப்பு பயிற்சி ஆசிரியர்கள், மின் துறை ஊழியர்கள் என அனைத்து அரசு துறைகளிலும், சிப்காட், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் ஆகியவற்றிலும் நடைமுறையில் இருக்கும் ஒப்பந்த ஊழியர் முறைகளை மற்றும் பணி நிரந்தரமற்ற வேலை முறைகளை தடை செய்ய வேண்டும். இப்போக்குகள் தொழிலாளர் விரோதமானவை. அறிஞர் அண்ணாவின் கூற்றுகளில் சொன்னால் இவை சுரண்டல் திட்டங்கள். இவைகளைக் களைந்து அண்ணாவின் கனவுக்கேற்ப தொழிலாளர் வளர்ச்சிக்குரிய திட்டங்களைத் தீட்ட வேண்டும்.

இந்திய ஒன்றியத்தை மோடி அரசு, தொழில்களை நடத்துவது அரசின் வேலையல்ல, கண்காணிப்பது மட்டுமே அரசின் வேலை என்று கூறி, குஜராத், பனியா, மார்வாடி முதலாளிகளின்  வேட்டைக்காடாக மாற்றி விட்டது. பொதுத்துறைகளையெல்லாம் தாரை வார்த்து விட்டது. முதலாளித்துவமே வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என தொழிலாளர் விரோத சட்டங்களைக் கொண்டு வந்து, ஆரிய ஆதிக்கத்தைத் தூக்கிப் பிடித்து, தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகப்படுத்தி, அவர்களின் உழைப்பைச் சுரண்டிக் கொண்டிருக்கிறது. இந்திய ஒன்றியம்  மதம், சாதியால் பிளவுகளை உருவாக்கி பொருளாதாரத்தை வீழ்த்திக் கொண்டிருக்கும்   இந்துத்துவவாதிகளுக்கல்ல, உழைப்பாளிகளுக்கே சொந்தம். இந்த  எண்ணம் தொழிலாளர்களுக்கு ஏற்படும் வகையில், சனாதனக் கூறுகளிலிருந்து அவர்களை விடுவிக்கும் வகையில் கருத்துப் பரப்பலை நாம்  விரிவாக மேம்படுத்த வேண்டும். தொழிலாளர்களிடையே அண்ணாவின் மேற்கோள்களைப் பரப்ப வேண்டும். தொழிலாளர்களை அணியப்படுத்தி  முதலாளித்துவத்தையும், ஆரியத்தையும் எதிர்த்து நிற்போம் என்பதே இந்த மே நாளின் உறுதிமொழியாக இருக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

காந்தி கொலையும் காமராசர் கொலை முயற்சியும்

  “கத்தி வைத்துக்கொள்ளுங்கள்! காமராஜரைப் பாதுகாப்பதற்காக, கண்டிப்பாய் கத்தி வைத்துக் கொள்ளுங்கள்!” – காமராசர் மீதான கொலை முயற்சி மேலும் தொடராதிருக்க பெரியார் தனது தொண்டர் படையிடம் இட்ட கட்டளை. “இந்த தேசத்திற்கு காந்தி தேசம் என்று பெயர் வையுங்கள்” – காந்தியார் கொலை நினைவூட்டப்பட்டுக் கொண்டேயிருக்க பெரியார் இந்திய சமூகங்களின் முன் வைத்த வேண்டுகோள். காமராசர் மீதான கொலை முயற்சியும், காந்தியடிகள் உயிர் பறித்த நிகழ்வும் வேறு வேறான காரணங்களில்லை. ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ அடிப்படைவாதக் கும்பலின் வேரான சனாதனத்தை அசைத்துப் பார்த்ததால் மனுதர்மத்தை நிலைநிறுத்தத் துடித்த கும்பல் மேற்கொண்ட வெறியாட்டமே இவைகள். அதற்கு மேற்பூச்சுக் காரணமாக அமைந்தவையே பசுவதைத் தடுப்புச் சட்டப் போராட்டம் வழியே காமராசர் மீது ஏவப்பட்ட கொலை முயற்சியும், இந்தியப் பிரிவினைக்கு காந்தி வித்திட்டார் என்பதற்காக கொன்றதாக கோட்சே கூறிய சாட்சியும்.   காமராசர் மீதான கொலை முயற்சி: அப்பொழுது காமராசர் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராயிருந்தார். அவரின் சோசலிய சமத்துவம் நோக்கிய பேச்சுகள் சனாதனிகளுக்கு ஆத்திரத்தைத் தூண்டிக் ...

இந்துத்துவ கூடாரமாகிறதா கோவை பள்ளிகள்?

  ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சாகாக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் கோவை காவல்துறை  சில நூற்றாண்டுகளுக்கு முன்பு  இந்த நிலத்தை ஆண்ட அரசர்களை சடங்கு பரிகாரங்கள் போன்ற மூடநம்பிக்கைகள் வாயிலாக பார்ப்பனர்கள் கட்டுப்படுத்தினர். அதன் மூலம் தங்களின் சனாதன கருத்துகளை  நம் சமூகத்தின் வேர்வரை பரப்பி தங்களுக்கு கீழ் மற்ற அனைவரும் என்ற சாதி வருணாசிரமத்தை நிறுவினார்கள். இதன் நீட்சியாக, பள்ளி கல்வித்துறை காவல்துறை நீதித்துறைகளில் பாஜக தனக்கானவர்களை நிரப்பி எல்லோரையும் தனக்கு கீழ் கட்டுப்பட்டவர்களாக நடத்த முயற்சிக்கிறது. வடஇந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்  இந்துமத அடிப்படைவாத கருத்துக்களை சாகா பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களை கொண்டு கிருத்துவ இஸ்லாமிய மத வெறுப்பை வளர்கிறது. சிறுபான்மை மதங்களுக்கு எதிராக வன்முறையையும் மதக்கலவரத்தையும் தூண்டிவிட்டு அவர்களை ஒடுக்க ஆதரவாக இருந்து வருகிறது. அதுபோல, தமிழகத்தில் பாஜக, இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா போன்ற எண்ணற்ற கட்சிகளையும் இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி குண்டர்களை இணைத்துக்கொண்டு ”ராஷ்ட்ர சேவிகா சம்தி” என்கின்ற அமைப்...

காவி பயங்கரவாதம்: அச்சுறுத்தலாகும் ஆர்.எஸ்.எஸ்.

  இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கம் பயங்கரவாத அமைப்பு என்று கூறி 3 முறை தடை செய்யப்பட்டது. முதலில் 1948ல் கோட்சேவால் காந்தி சுட்டு கொல்லப்பட்டபோதும், பின்னர் அவசர நிலை (1975-77) அமலில் இருந்தபோதும், மற்றும் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டப் போதும் தடைசெய்யப்பட்டது. இப்படியான தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பு இன்று இந்தியாவில் பெரிய நகரங்கள் தொடங்கி சிறிய பட்டித்தொட்டிகள் வரை சுமார் 60,000-க்கும் மேற்பட்ட கிளைகளை பரப்பியிருக்கிறது என்றால் அது சாதாரண விடயம் அல்ல. அவர்கள் நினைத்ததை சாதிக்க சமூகத்தின் அடி வரை ஊடுருவி அர்ப்பணிப்போடு பணிச் செய்யும் ஒரு தொண்டர் படையை உருவாக்கி உள்ளனர். அதேபோல் அதிகாரத்தின் எல்லா மட்டத்திலும் இவர்களின் ஆட்கள் நிரம்பி உள்ளனர். அதிலும் உயர் மட்ட அதிகாரத்தில் இருக்கும் இவர்கள் நினைப்பதை நடத்தி தரும் உயர் சாதியினர் தான் ஆர்எஸ்எஸின் மிகப் பெரிய பலம். தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கம் காலூன்ற முடியாதென நம்மில் பலர் பேசினாலும், நடைமுறையில் RSS தமிழ்நாட்டில் கால்பதித்து ஆழமாக வேரூன்றி வெகு நாட்களாகி விட்டது. அவர்கள் தமிழகத்தில் தாலுகா வாரியாக 1,788 கிளைகளுக்கு மேல் பரவ...