Skip to main content

காமராசரை அரியணை ஏற்றிய பெரியார் | Kamarajar and Periyar Efforts for education


138 Yes, 138 No *

இந்த ஓட்டு விகிதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மைல்கல். 1953இல் அன்றைய முதல்வர் இராஜாஜியால் அறிமுகப்படுத்தப்பட்ட "மாறுபட்ட தொடக்க கல்வி திட்டம்" (aka) குலக்கல்வி திட்டத்திற்கு எதிராக கம்யூனிஸ்ட் தலைவர் கோபாலன் அவர்களால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் 138-138 என்று சமநிலையில் இருக்க, பேரவை தலைவர், ஜெ. சிவசண்முகம் பிள்ளை (who was earlier the Scheduled caste mayor of Madras) அவர்களின் வாக்குடன் 139 No- 138 Ayes என்ற வாக்கு எண்ணிக்கையுடன் தோற்கடிக்கப்பட்டது. 

பிறகு, இரண்டாவது முறையாக கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில், இத்திட்டத்தை ஆய்வு செய்வதற்காக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் 138 Ayes - 137 No என்ற வித்தியாசத்தில் குலக்கல்வி திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பிறகு இதனை ஆய்வு செய்த பருலேகர் கமிட்டியும் இத்திட்டம் முறையானது தான் என்று அறிக்கை தாக்கல் செய்தது.

இத்திட்டத்தின் மாஸ்டர் மைண்ட் இராஜாஜி, சட்டமன்றம் மற்றும் அமைச்சரவையுடன் ஆலோசிக்காமல் தானாகவே முன்னெடுத்தார். இதற்கு அவர் கூறிய கருத்து "Did Shankara and Ramanuja announced their philosophies after consulting others?" குலக்கல்வி முறையிலும், வர்ணாசிரம குலக்கல்வி முறையிலும், வர்ணாசிரம தர்மத்திலும் வேரூன்றி, இந்த சமூகம் செழித்து சமநிலையில் வாழ குலக்கல்வி முறையே சிறந்தது என்று பிடிவாதமாக இருந்தார் இராஜாஜி.

பெரியார் மற்றும் திராவிட இயக்க தலைவர்கள் இத்திட்டத்தின் ஆபத்தை உணர்ந்து, தமிழகமெங்கும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். விடுதலை இதழில் பெரியார் கூறியதாவது "இந்த குலக்கல்வி திட்டம் வர்ணாசிரம தர்மத்தை நிலைநிறுத்தி, ஆட்சி பொறுப்புகளில் இருக்கும் பிராமணர்கள் மட்டுமே சமூக கட்டமைப்பில் மேல்நோக்கி செல்ல, கல்வியில் பின்தங்கிய சூத்திரனை சூத்திரனாகவே இருக்க முற்படுகிறது" கூடிக்கொண்டே வரும் மக்கள் எதிர்ப்பால் காங்கேயம் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. 

தேசிய அளவில் இத்திட்டத்தின் எதிர்ப்பு கவனம் ஈர்த்தது. தேசிய காங்கிரஸ் தலைவர்கள் இத்திட்டத்தை ஆதரித்தாலும், கடும் எதிர்ப்பு காரணமாக இராஜாஜியை இத்திட்டத்தை கைவிட ஆலோசித்தனர். இராஜாஜி கைவிட மறுத்து 1954இல் ராஜினாமா செய்தார். காமராஜர் முதல்வரானார்.

இராஜாஜி மூடிய கல்வி கதவுகளை அனைவருக்குமாக திறந்து வைத்தார் காமராஜர். அழகப்ப செட்டி கமிட்டி மூலம் பள்ளியில் சேருவோர் எண்ணிக்கை இரட்டிப்பு ஆனது.

பெரியாருக்காக கப்பலையே நிறுத்திய காமராஜர்!


1956ம் ஆண்டு காமராசர் முதலமைச்சராக இருந்த காலகட்டம். தந்தை பெரியாருக்கு மலேசியா-சிங்கப்பூர் நாடுகளில் இருந்து அழைப்பு வந்தது. சிங்கப்பூர் 'தமிழ்முரசு' நாளிதழின் ஆசிரியர் கோ.சாரங்கபாணி அவர்கள் ஐயாவை அழைக்க ஏற்பாடு செய்து இருந்தார்கள். முதலில் பர்மாவுக்கு போய் பின்னர் அங்கிருந்து மலேசியாவின் பினாங்கு பிறகு சிங்கப்பூர் என பயணம் செய்வதாக திட்டம்.

ஐயாவுடன் அவரின் உறவினர்கள் ஆனைமலை நரசிம்மன், அவரது சகோதரி ராமகிருஷ்ணம்மாள், தவமணியம்மை, நான் ஆகிய ஐந்து பேரும் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இடையில் சில நாட்களே எஞ்சி இருந்தது. வேலைகள் மின்னல் வேகத்தில் நடைபெற்றாக வேண்டும். நானே அங்குமிங்கும் ஓடி காரியங்களை கவனித்தேன். ஐந்து பேருக்கும் பாஸ்போர்ட் எடுத்துவிட்டோம். பர்மா தூதரக அலுவலகத்தில் விசா எடுப்பதற்கு போலீஸ் கமிஷனர் திரு.குப்புசாமி பெரிதும் உதவினார். பர்மியத் தூதரக அதிகாரிகளை படாதபாடு படுத்தி ஒரு வழியாக விசாவை வாங்கினோம். இதற்கிடையில் ஆறேழுநாட்கள் ஓடிவிட்டன. ஒரே ஒருநாள் மட்டுமே எஞ்சி இருந்தது.

விசாவைப் பெற்றுக்கொண்டு கப்பல் கம்பெனிக்குப் போய் ஐந்து பேருக்கும் டிக்கெட் எடுத்தோம். எஸ்.எஸ்.ரஜூலா என்கிற அந்த புகழ்பெற்ற கப்பல் கம்பெனிக்காரர்கள் டிக்கெட் கொடுக்கிற போதுதான் 'நீங்கள் ஐந்து பேரும் பயணம் செய்ய வேண்டுமானால் மாநில அரசாங்கம் கொடுக்கும் 'நோ அப்செக்சன் சர்டிபிகேட் எடுக்க வேண்டும்!' என்று சொன்னார்கள். 'இது என்னடா புதுக்கரடி?' என்று நான் ஆடிப்போனேன். டிக்கெட் கைக்கு கிடைக்கும்போதே மாலை 6மணி ஆகிவிட்டது. மறுநாள் காலை 7 மணிக்கு கப்பலில் புறப்பட வேண்டும். இரவு ஒரே ஒரு பொழுதுக்குள் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் சான்றிதழில் சீல் பெற்றாக வேண்டும்.கோட்டையில் எல்லோரும் வீட்டுக்குப் போயிருப்பார்கள். நாளை காலையில் கப்பலில் புறப்பட்ட மாதிரிதான் என்று கவலையோடு நான் பெரியாரின் வீட்டுக்கு வந்தேன். மணியம்மையும் கிருஷ்ணம்மாளும் பயணம் புறப்படுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தனர். பெட்டி படுக்கைகள் கட்டி தயாராக வைக்கப்பட்டிருந்தன. இந்த பரபரப்பைப் பற்றியெல்லாம் எந்த கவலையும் படாமல் தந்தை பெரியார் எப்போதும்போல படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார்!

நான் மிகவும் சோர்ந்துபோய் வருவதைக் கண்ட மணியம்மை விபரம் கேட்டார். நிலைமையை எடுத்துச் சொன்னேன். சற்று யோசித்த மணியம்மை, 'நீ உடனே முதலமைச்சர் காமராஜரை போய்ப் பார். அவரால் உடனே ஏற்பாடு செய்ய முடியும். ஐயாகிட்டே இதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காதே. அவர் சத்தம் போடுவார். முதலைமைச்சருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாதென்பார்' என்று சொன்னார்.

நான் இரவு 8மணி அளவில் காமராஜரின் திருமலைப்பிள்ளை சாலை வீட்டுக்கு போனேன். காமராஜரிடம் நடந்ததை சொன்னேன். காமராஜரோ, "இதற்கு நீ ஏன் இவ்வளவு அலைஞ்சே? என்கிட்டே சொல்லி இருந்தால் பாஸ்போர்ட்லேருந்து மற்ற எல்லா ஏற்பாடுகளையும் நானே செய்து இருப்பேனே.. சரி நீ நாளைக்கு காலைல பத்து மணிக்கு வா. நான் சீல் போட்டு கொடுக்க சொல்றேன்" என்றார். நான் தயங்கியபடி மெல்ல, "கப்பல் காலை 7 மணிக்கு. ராத்திரிக்குள் சீல் போட்டு வாங்கினாத்தான்" என்றேன்.

காமராஜர் உடனே, "அட என்னப்பா நீ..? போகப்போறது பெரியார்! வேற யாரும் சாதாரண ஆளில்லை. கப்பலை நிக்கச்சொல்லி மத்தியானமா எடுக்கச் சொல்வோம்! போ போ.. காலைல வா!" என்றார். இதெல்லாம் நடக்கிற காரியமா என எனக்கு மலைப்பாகத் தோன்றியது. நான் தயக்கத்தோடுதான் அவர் சொன்னதை கேட்டுக் கொண்டிருந்தேன். அடுத்த நிமிடமே முதலமைச்சர் காமராஜர் அங்கிருந்த உதவியாளர்களிடம் "ரஜூலா கப்பல் சதக் தம்பி மரைக்காயருக்கு போனைப் போடு" என்றார்.

தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி அவரிடம் கொடுத்தனர். "இந்தாப்பா நாளைக்கு பெரியார் பர்மாவுக்கு போறாரு. அவருக்கு அரசாங்க அனுமதி 12 மணிக்குத்தான் கெடைக்கும். அவர் கப்பலுக்கு வந்து சேர 1 மணி ஆயிடும். நீங்க என்ன பன்றீங்க.. நாளைக்கு மட்டும் கப்பல் மதியம் ரெண்டு மணிக்கு எடுங்க. பயணிகளிடம் முன்கூட்டியே அறிவிச்சிடுங்க. மற்ற பயணிகளுக்கும் தொல்லை இருக்காதில்லையா.. ஞாபகம் இருக்கட்டும்.. போறது நம்ம பெரியார்.. புரியுதான்னேன்" என்று உரிமையோடும் அதிகாரத்தோடும் பேசிவிட்டு வைத்தார். பின்னர் என்னைப்பார் த்து, "என்னய்யா இப்போதாவது தைரியம் வந்துச்சா.. நீ பொறப்படுப்பா.. கவலையே படாதே.. கப்பலையே நிறுத்திப் புடுவோம்!" என்றார்.

மறுநாள் காலையில் சொன்னதுபோலவே எல்லா இடத்திலும் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்து வைத்திருந்தார். எனக்கு ராஜ மரியாதையோடு வேலைகள் நடந்தன. பகல் 12 மணிக்கெல்லாம் நான் வெற்றியோடு வீடு திரும்பினேன். காமராஜர், "இதை எல்லாம் பெரியார்கிட்ட போய்ச் சொல்லிகிட்டு இருக்காதே. அவருக்கு இதெல்லாம் கொஞ்சம்கூட பிடிக்காது.. என்ன புரியுதான்னேன்" என்றார்.

அதிகாரமோ பதவியோ ஏதுமில்லாத ஒரு சாதாரண மனிதனுக்காக கடலில் கப்பல் காத்துக் கிடந்தது. நாங்கள், தலைவர் காமராஜரின் பெருந்தன்மையை நினைத்து பூரித்தபடி பயணம் கிளம்பினோம்.

சொன்னவர் முன்னாள் அமைச்சர் க.இராசாராம்.
அனுப்பி உதவியவர்: விடாது கருப்பு

Comments

Popular posts from this blog

இந்துத்துவ கூடாரமாகிறதா கோவை பள்ளிகள்?

  ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சாகாக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடும் கோவை காவல்துறை  சில நூற்றாண்டுகளுக்கு முன்பு  இந்த நிலத்தை ஆண்ட அரசர்களை சடங்கு பரிகாரங்கள் போன்ற மூடநம்பிக்கைகள் வாயிலாக பார்ப்பனர்கள் கட்டுப்படுத்தினர். அதன் மூலம் தங்களின் சனாதன கருத்துகளை  நம் சமூகத்தின் வேர்வரை பரப்பி தங்களுக்கு கீழ் மற்ற அனைவரும் என்ற சாதி வருணாசிரமத்தை நிறுவினார்கள். இதன் நீட்சியாக, பள்ளி கல்வித்துறை காவல்துறை நீதித்துறைகளில் பாஜக தனக்கானவர்களை நிரப்பி எல்லோரையும் தனக்கு கீழ் கட்டுப்பட்டவர்களாக நடத்த முயற்சிக்கிறது. வடஇந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்  இந்துமத அடிப்படைவாத கருத்துக்களை சாகா பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களை கொண்டு கிருத்துவ இஸ்லாமிய மத வெறுப்பை வளர்கிறது. சிறுபான்மை மதங்களுக்கு எதிராக வன்முறையையும் மதக்கலவரத்தையும் தூண்டிவிட்டு அவர்களை ஒடுக்க ஆதரவாக இருந்து வருகிறது. அதுபோல, தமிழகத்தில் பாஜக, இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா போன்ற எண்ணற்ற கட்சிகளையும் இந்துத்துவ தீவிரவாத அமைப்புகளை உருவாக்கி குண்டர்களை இணைத்துக்கொண்டு ”ராஷ்ட்ர சேவிகா சம்தி” என்கின்ற அமைப்...

இடப்பங்கீடா.. இட ஒதுக்கீடா.. எது சமூக நீதி?

  சமூக நீதி என்ற சொல் தமிழ்நாட்டில் மட்டும் பயன்பாட்டிலுள்ள சொல் அல்ல இந்தியாவில் மட்டும் பயன்பாட்டிலுள்ள சொல் அல்ல. அது, “Social justice” என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது. இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அரசியல் பொருளாதார சொல்லாடலாக இருக்கக்கூடிய இந்த “Social justice” என்கிற சொல்லை அமெரிக்கத் தத்துவவியலாளர் ஜான் ராவல்ஸ் (John Rawls) என்பவரோடு தான் உலகம் தொடர்புபடுத்துகிறது. அவர் 1971 இல் தனது கோட்பாடு ஒன்றை வெளியிட்டார். Rawls Theory என்று அறியப்படுகிற அதன் சாரம் என்பது “Distribution of Goods in a Society”. அதாவது, சமூகத்தில் உள்ள அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுதல் ஆகும். கோட்பாடு ரீதியாக, உண்மையில் இதுதான் சமூக நீதி. ஆனால், தமிழ்நாட்டில் 1920களிலேயே நீதிக்கட்சியும் பெரியாரும் அந்த சமூகநீதியை தங்கள் அரசியல் நடவடிக்கைகளின் மூலம் நடைமுறைப்படுத்திக் காட்டிவிட்டனர் என்பது தான் நம் வரலாறாக இருக்கிறது. அவர்கள் சமூக நீதி என்ற சொல்லை அப்போது பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம், ஆனால் விகிதாச்சார வகுப்புவாரி  இடப்பங்கீடு உரிமையை நடைமுறைக்கு கொண்டு வந்தவர்கள், அவர்கள். சமூக நீதி என்ற...

காந்தி கொலையும் காமராசர் கொலை முயற்சியும்

  “கத்தி வைத்துக்கொள்ளுங்கள்! காமராஜரைப் பாதுகாப்பதற்காக, கண்டிப்பாய் கத்தி வைத்துக் கொள்ளுங்கள்!” – காமராசர் மீதான கொலை முயற்சி மேலும் தொடராதிருக்க பெரியார் தனது தொண்டர் படையிடம் இட்ட கட்டளை. “இந்த தேசத்திற்கு காந்தி தேசம் என்று பெயர் வையுங்கள்” – காந்தியார் கொலை நினைவூட்டப்பட்டுக் கொண்டேயிருக்க பெரியார் இந்திய சமூகங்களின் முன் வைத்த வேண்டுகோள். காமராசர் மீதான கொலை முயற்சியும், காந்தியடிகள் உயிர் பறித்த நிகழ்வும் வேறு வேறான காரணங்களில்லை. ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ அடிப்படைவாதக் கும்பலின் வேரான சனாதனத்தை அசைத்துப் பார்த்ததால் மனுதர்மத்தை நிலைநிறுத்தத் துடித்த கும்பல் மேற்கொண்ட வெறியாட்டமே இவைகள். அதற்கு மேற்பூச்சுக் காரணமாக அமைந்தவையே பசுவதைத் தடுப்புச் சட்டப் போராட்டம் வழியே காமராசர் மீது ஏவப்பட்ட கொலை முயற்சியும், இந்தியப் பிரிவினைக்கு காந்தி வித்திட்டார் என்பதற்காக கொன்றதாக கோட்சே கூறிய சாட்சியும்.   காமராசர் மீதான கொலை முயற்சி: அப்பொழுது காமராசர் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராயிருந்தார். அவரின் சோசலிய சமத்துவம் நோக்கிய பேச்சுகள் சனாதனிகளுக்கு ஆத்திரத்தைத் தூண்டிக் ...